ஒலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்!

ஒலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெறும் என்று வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, உபேர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் பீக் நேரங்களில் வாடகை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுவதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதேபோல், பயணிகளின் புக்கிங்கை கார் டிரைவர்களுக்கு அலாட் செய்யும் இந்த நிறுவனங்கள் அதற்காக குறிப்பிட்ட அளவு கமிஷன் தொகையும் எடுத்துக்கொள்கிறது. இதுபோக தற்போது பைக் டாக்சிகளையும் ஓலா, ரேபிடோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. இதனால் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 2 நாட்களுக்கு செயலியை நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஓலா, உபேர் ஓட்டுநர்கள் அறிவித்து உள்ளனர். இது குறித்து உரிமைக் குரல் ஓட்டுனர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் உசைன் கூறுகையில், ஓலா, உபேர் செயலிகள் மூலமாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும். வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும். வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் 2 நாட்களுக்குத் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் இந்த மூன்று நாட்களும் ஓலா, உபேர், உள்ளிட்ட செயலிகள் மூலமாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகங்கள் ஓடாது.

இன்று சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாளை மதுரை, திருச்சி, கோவையில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு 17-ந் தேதி போராட்டம் நடத்த உள்ளோம். நாளை மறுநாள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.