“இந்தியா” கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா: எடப்பாடி பழனிசாமி

அதிமுக சார்பில் எக்ஸ் பக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவைச் சரமாரியாக விமர்சித்துப் பேசினார்.

அதிமுகவின் 52ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் அதிமுக சார்பில் டுவிட்டர் ஸ்பேசில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் நாம் அதிமுகவைப் பலப்படுத்தியே தீர வேண்டும். இந்தப் பணிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டும். அவர்களால் தான் அதிமுகவைப் பலப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதை நாம் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தருகிறார்கள்.. மற்ற நிறுவனங்களின் படங்களுக்குச் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. அப்படியிருக்கும் போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் “இந்தியா” என்ற கூட்டணியை அமைத்து நாட்டை காப்பாற்றப் போகிறேன் எனக் கிளம்பிவிட்டார். லோக்சபா தேர்தலில் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.. திமுக அரசை வீட்டு அனுப்ப வேண்டும். அதற்கான வேலையை மட்டும் அதிமுக தொண்டர்களாகிய நீங்கள் பாருங்கள்.. அதிமுக கூட்டணியைப் பார்த்து உங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலின் கேட்கிறார்.. நான் அவரிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த “இந்தியா” கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா” என்று அவர் பேசினார். மேலும், வரும் அக். 30ஆம் தேதி தேவர் குருபூஜைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.