காசா மருத்துவமனை குண்டுவெடிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

பாலஸ்தீனத்தின் காசா மருத்துவமனையில் நடந்த குண்டு வெடிப்பில் 500க்கும் மேற்பட்ட கொள்ளப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையில் கடந்த அக்டோபர் 7 ம் தேதி போர் தொடங்கியது. சுமார் 11 நாட்களை கடந்தும் போர் தீவிரமாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உள்ள பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. பதிலுக்கு ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டுகளை வீசி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து ஏராளமான ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டதால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரையும் மீட்க முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சூழலில் மிக கொடூரமாக காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனை முழுவதும் மரண ஓலம் காணப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த சம்பவத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகள் தவறுதலாக விழுந்திருக்கலாம் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் மறுத்துள்ளனர். இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டினாலும், மருத்துவமனையில் குறிவைத்து குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.