தமிழ்நாடு திராவிட கட்சிகளின் கைகளில் இருந்து பா.ஜனதா வசமாகும்: அண்ணாமலை

பவானியில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பவானி ஜமுக்காள உற்பத்தியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் 3-வது கட்ட நடைபயணத்தை நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடங்கினார். ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.
இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் பிரிவு பகுதியில் அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் பூக்கடை பிரிவில் இருந்து அந்தியூர் பிரிவு வரை அண்ணாமலை நடந்து சென்றார். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அவரை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அந்தியூர் பிரிவு சாலையில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவா் கூறியதாவது:-

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது பவானியில் கலெக்டராக வில்லியம் கேரோ இருந்து உள்ளார். கூடுதுறையில் வசித்தபோது அவர் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து விடும் நிலையில் இருந்தது. அப்போது ஒரு குழந்தை வடிவில் வேதநாயகி அம்மன் வந்து காட்சி அளித்து, தன்னை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து காப்பாற்றியதாக தனது பதிவேட்டில் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அன்று முதலே கோவிலின் சுற்றுச்சுவர் வழியே 3 துளைகள் போட்டு அதன் வழியே வேதநாயகி அம்மனை தினந்தோறும் அவர் தரிசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

மக்களுக்கான நலத்திட்ட பணிகள் எதையும் தி.மு.க. செய்யவில்லை. ஆனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததுதான் தி.மு.க.வின் சாதனை ஆகும். உதயநிதி ஸ்டாலினை முதல்- அமைச்சராக்கி ஆட்சி கட்டிலில் அமர வைப்பதே தி.மு.க. நோக்கமாக கொண்டு உள்ளது.

பிரதமர் மோடி, ஈரோடு மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்காக 33 ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்து உள்ளார். ஈரோடு நகரில் ரூ.2 கோடியில் மஞ்சள் மார்க்கெட் புதுப்பிக்கப்பட்ட நிலையில் ரூ.48 கோடியில் கட்டப்பட்டதாக பொய்யான தகவலை தி.மு.க.வினர் தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் போல் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தபோதும் அதனை மூடி மறைக்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பவானியில் புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம் உலகளவில் பிரசித்தி பெற்று உள்ளது. ஆனால் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பவானி ஜமுக்காள உற்பத்தி தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

கவுந்தப்பாடியில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர வேண்டும் என கவுந்தப்பாடி சர்க்கரை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பா.ஜனதா அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலம் கம்யூனிஸ்டுகள் வசமாக இருந்தது. கடந்த முறை அது பா.ஜனதா வசமானது. இதேபோல் தமிழ்நாடும் திராவிட கட்சிகளின் கைகளில் இருந்து பா.ஜனதா வசமாகும். தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை குடோன்களில் நடக்கும் வெடி விபத்தால் ஆண்டுதோறும் விலை மதிப்பே இல்லாத உயிர்கள் பலியாகி வருவது வேதனைக்குரியது. நீதி அரசர்கள் இதில் தலையிட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிலை குறுகிய காலத்திற்கு மட்டும் அனுமதிக்காமல் நீண்ட காலம் தயாரிக்க அனுமதித்தால் பெரும்பான்மையான விபத்துகளை தடுக்கலாம்.

தமிழகத்தில் சில நடிகர்களின் திரைப்படங்களை திரையிடக்கூடாது என சில காரணங்களை சொல்லி அரசு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ செயல்படக்கூடாது. சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். அரசியலாக பார்க்கப்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.