“தெலங்கானாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிலப்பிரபுக்களுக்கும் (டோரலா) பொதுமக்களுக்கும் (பிரஜலா) இடையேதான் போட்டி” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
தெலங்கானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தெலங்கானா சென்றுள்ளார். அவர் அங்கு காங்கிரஸ் சார்பில் நடந்து வரும் விஜயபேரி யாத்திரையில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டார். அதில், பூபால்பள்ளியில் இருந்து பெத்தாபள்ளி செல்லும் வழியில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தத் தேர்தலில் கேசிஆர் தோல்வியைத் தழுவுவார் என்று நான் நினைக்கிறேன். இந்தத் தேர்தலில் டோரலா (நிலப்பிரபுக்கள்) தெலங்கானாவுக்கும், பிரஜலா தெலங்கானாவுக்கும் (பொதுமக்கள்) தான் போட்டியே நடக்கிறது. அதாவது ராஜாவுக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான போட்டி இது. இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ் தொடர்ந்து மக்களிடமிருந்து விலகியே நின்றிருக்கிறார். மாநிலத்தின் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறையைப் பயன்படுத்தி பாஜக வழக்குகள் பதிந்து வருகிறது. ஆனால், கேசிஆர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார். தெலங்கானா முதல்வர் கேசிஆருக்கு எதிராக சிபிஐ அல்லது அமலாக்கத் துறை வழக்குகள் பதியாதது கேள்விகளை எழுப்புகிறது.
நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கோரி வருகிறேன். ஆனால், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும், கேசிஆரும் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசவில்லை. நாங்கள் ஏற்கெனவே சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னெடுப்புதகளைச் செய்திருக்கிறோம். ஆட்சிக்கு வந்தததும் தெலங்கானாவிலும் அதற்கான முயற்சியை செய்வோம். கேசிஆர் குடும்பம் தெலுங்கானாவை எவ்வளவு சுரண்டியுள்ளது என்பது சாதிவாரி கணக்கெடுப்பு பின்னர் தெரியவரும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.