எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு தொகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, வருகிற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். மேலும் கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவு சேர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். எங்களுடைய வெற்றி மாபெரும் வெற்றியாக இருக்கும். கூட்டுறவு தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவார்கள். லியோ படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது. விஜய் அரசியலுக்கு வருவதை பார்த்து பயந்துள்ளார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக உள்ளது. மத்திய அரசு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே தமிழ்நாட்டு அமைச்சர்கள் மீது சோதனை நடத்துகிறார்கள். இத்தனை ஆண்டு காலம் சோதனை நடத்தாமல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சோதனை நடத்துவதுதான் எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு சீமான் கூறினார்.