காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் குழப்பம் தொடருமானால் பாஜகவை வெல்வது கடினம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ள சமாஜ்வாதி கட்சி முயன்ற நிலையில், அதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இதனால், தனித்துப் போட்டியிட உள்ளதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க விருப்பம் இல்லை என்றால் அதை காங்கிரஸ் கட்சி முன்பே கூறி இருக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் எங்கள் கட்சி எங்கெல்லாம் வலிமையாக இருக்கிறதோ அங்கெல்லாம் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். இண்டியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கானது என்பதை அறிவேன். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இதுபோன்ற குழப்பம் தொடருமானால், அக்கட்சியுடன் யார் கூட்டணி வைப்பார்கள்? இதுபோன்ற குழப்பமான மனநிலையுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுமானால், பாஜகவை தோற்கடிப்பது கடினம்.
பாஜக வெறுப்பு அரசியலை மேற்கொள்கிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி குறித்து பாஜக அதிகம் பேசுகிறது. ஆனால், மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் இரட்டை இன்ஜின் ஆட்சிதான் இருக்கிறது. ஆனால், வளர்ச்சி எங்கே இருக்கிறது? ஷாஜஹான்பூரில் தெருவெங்கும் குப்பையாக இருக்கிறது. மாடுகள் சாலைகளில் திரிந்து கொண்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. பாஜக பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.