நீட் தேர்வின் நோக்கமே போலி மருத்துவர்களை உருவாக்குவது தான்: சீமான்

நீட் தேர்வு ஒருபோதும் தரமான மருத்துவர்களை உருவாக்காது. அது போலி மருத்துவர்களைதான் உருவாக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மருத்துவக் கல்லூரிகளில் பயில நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் சூழலில், மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது அதிகரித்து வருகிறது. மருத்துவர் கனவுடன் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, தங்கள் லட்சியத்தை எட்ட நீட் தேர்வு ஒரு பெரிய தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இரவு பகலாக நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இந்த விபரீதங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுத்து வருகிறார். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக கூறிய நிலையில், தற்போது இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகிறது. இது திமுக தலைமைக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-

நீட் தேர்வை நாம் வெறுப்பதற்கும், அருவருப்பாக பார்ப்பதற்கும் முக்கிய காரணம், அது தரமான மருத்துவர்களை உருவாக்கவே உருவாக்காது. அது போலியான மருத்துவர்களை தான் உருவாக்கும். நீட் தேர்வை நடத்த கூட அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தை நீங்கள் (மத்திய அரசு) நியமிச்சிருக்கீங்க. இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்கணும்னு அவன் ஏன் கவலைப்பட போறான்? ஒரு தேர்வை கூட நடத்த உங்களால் முடியல. நீங்கதான் தரமான மருத்துவர்களை உருவாக்க போறீங்களா?

நான் நீட் தேர்வு எழுதிட்டு வர்றேன். எனக்கு பாடம் எடுக்கப் போறது யாரு? பழைய மருத்துவர்கள்தான். நான் எதை படிக்கப் போறேன்? பழைய பாடத்திட்டத்தை தான். அப்படி இருக்கும் போது, புதுசா ஒரு தரமான மருத்துவர்கள் எங்கே இருந்து வந்துருவாரு? நீட் தேர்வுதான் தகுதியானது தான் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 தூக்கிருங்க. 10-ம் வகுப்பு முடிச்சதுமே நீட் கோச்சிங்குக்கு போயிற வேண்டியதுதானே. தகுதியான மருத்துவர்களை நீட் தேர்வு தான் உருவாக்கும்னா, இதுவரை உள்ள மருத்துவர்களை தகுதிநீக்கம் பண்ணுங்க.

பிரதமருக்கு உடல்நிலை சரியில்லைனு வெச்சிக்கோங்க.. நான் நீட் எழுதிட்டு வந்த வைத்தியர்ட்ட மருத்துவம் பார்ப்பேனு அடம்பிடிப்பாரா? உத்தரபிரதேசத்தில் நோயாளிக்கு படுக்க இட வசதி இல்ல. குளுக்கோஸ் பாட்டில் வைக்க ஸ்டாண்ட் இல்ல. அந்த ஆளு படுத்துட்டே ஒத்த கைல புடிச்சிட்டு இருக்கான். தரமான மருத்துவக் கட்டமைப்பை கொடுக்கவே உங்களால முடியல. இந்த லட்சணத்துல நீங்க தரமான மருத்துவர்களை உருவாக்க போறீங்களா?.

சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புதல், சூரியன் ஆய்வுக்கு விண்கலம் அனுப்புதல் உள்ளிட்டவைகள் வீணான ஆய்வுகள். இந்த ஆராய்ச்சிகளால் நமக்கு என்ன கிடைக்கும்? 25 கோடி மக்கள் இங்க இரவு உணவு இல்லாமல் தூங்கி கொண்டிருக்கிறார்கள் என நீங்கதான் சொன்னீங்க.. கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு கொடுத்தோம்னு நிதி அமைச்சர்தாம்பா பேசுறாங்க.. இங்க வாங்கப்பா முதலில்.. சாலையை சவக்குழியில்லாமல் போடுங்கப்பா.. சாலையை ஒழுங்கா போடுடா அதான்டா டெவலப்.. பிச்சைக்காரன் ஸ்வைப் மெஷின் வைத்து பிச்சை எடுப்பது டெவலப் இல்லையே.. பிச்சைக்காரனே இல்லாத நாடாக உருவாக்குவதுதான் வளர்ச்சி. காமன்வெல்த், ஜி 20 மாநாடுகளின் போது எத்தனை பதாகைகளை வைத்து குடிசைகளை மறைச்சீங்க.. உங்களால் நம்ப முடியுமா? 13,000 பிச்சைக்காரர்களை ஒரே நாளில் லாரியில் ஏற்றி வேற மாநிலத்தில் கொண்டு போய் இறக்கிவிட்டாங்க..

சரிப்பா.. சந்திரமண்டலத்துல மனிதர்களை குடியேற்றிட்டீங்க.. முதலில் யாரை ஏற்றுவ? இந்துவையா? கிறிஸ்தவரையா? இஸ்லாமியரையா? உன் நாட்டு மக்களை சந்திரமண்டலத்தில் குடியேறவிட்டுட்டு ரஷ்யா, அமெரிக்கா எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும்? தண்டக் காசு, கருமாந்திரம் பிடிச்ச காசு.. மனித கழிவை மனிதனே மூழ்கி எடுத்துகிட்டு இருக்கான். அமெரிக்காவில் எல்லாம் மனித கழிவை இயந்திரங்கள் எடுக்கிறது.. அதற்கு ஒரு மாற்றை உருவாக்க முடியலை. இன்னைக்கும் விஷவாயு தாக்கி செத்துகிட்டு இருக்கோம். 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுன்னு நீதிமன்றம் சொல்ற அளவுக்கு இருக்கு.

இயந்திரத்தில் வாக்குகளை போடுகிறோம்.. மனித கழிவை மனிதன் அள்ளுகிறான்.. 75 ஆண்டுகளாகிவிட்டது நாடு விடுதலை பெற்று. வளர்ச்சி என்பது எதை நோக்கியது? ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ரயில்கள் வந்து மோதி சாகிறான்.. இதை கணிக்க முடியலை. இவ்வளவுதான் உங்க தொழில்நுட்பம், வளர்ச்சி. ஏய் நான் சூரியனை பார்க்கப் போறேன்.. சூரியனை சுற்றி என்ன பண்ண போற? வாழ்கிற பூமியை உங்களால் காப்பாற்ற முடியலை. க்ளீன் இந்தியா திட்டம் என்னாச்சு? பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என நான் பேசலாம்.. ஒரு பிரதமர் பேசலாமா? இருக்கமாட்டாத டைலர்.. வேலை இல்லாம யானைக்கு டவுசர் தைச்சானு சொல்வாங்க.. அந்த கதைதான்.. இவனுகளுக்கு ஒரு வேலையும் இல்லை.. யானைக்கு டவுசர் தைச்சிகிட்டு இருக்காங்க. இவ்வாறு சீமான் கூறினார்.