நாட்டிலேயே ஊழல் மலிந்த மாநிலம் தெலுங்கானா என ராகுல் காந்தி பேசிய நிலையில், அவருக்கு கேசிஆரின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெலுங்கானா சென்று 3 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவையும், அவரது பிஆர்எஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “இந்தத் தேர்தலில் சந்திரசேகர ராவ் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார். இந்தத் தேர்தலில் செல்வந்தர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது. அதாவது ராஜாவுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான போட்டி இது. இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் தொடர்ந்து மக்களின் குறைகளுக்குச் செவிசாய்க்காமல் அவர்களிடம் இருந்து விலகியே இருக்கிறார். மாநிலத்தில் ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி இங்குதான் நடக்கிறது. மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களையும் ஒரு குடும்பத்தினர் மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றனர்” என விமர்சித்தார்.
மேலும், “மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாடு முழுதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை ஏவிவிட்டு வழக்குகள் பதிந்து வருகிறது. ஆனால், இங்கு கேசிஆரை மட்டும் காப்பாற்றி வருகிறது. ஊழலில் மூழ்கிப்போன கேசிஆர் மீது சிபிஐ அல்லது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காதது மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது” என்று ராகுல் காந்தி விளாசினார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், எம்.எல்.சியுமான கவிதா ராகுல் காந்திக்கு பதில் கொடுத்துள்ளார். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சியை நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி என்று தெலுங்கானாவில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலளித்த கவிதா, மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே தெலுங்கானாதான் ஊழல் குறைந்த மாநிலம் என்று கூறியுள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கவிதா, “ராகுல் காந்தி காட்டுச் சிங்கம் அல்ல, அவர் ஒரு காகிதப் புலி. அவரிடம் என்ன ஸ்கிரிப்ட் கொடுக்கப்பட்டாலும் அதைப் படிப்பார். கொடுத்ததை படிக்கும் கிளி. உள்ளுர் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள மாட்டார். வேறு எந்த மாநிலத்துக்கும் பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு ராகுல் காந்தி ஹோம் வொர்க் செய்ய வேண்டும்” என்று கவிதா ராகுல் காந்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், கே.சி.ஆர் வேறு யாரையும் போல வழக்கமான அரசியல் தலைவர் அல்ல. அவர் இயக்கத் தலைவர். அவர் அடிமட்டத்திலிருந்து வந்துள்ளார். மொத்த பிராந்தியத்தின் மக்கள் பிரச்சனைகளையும் அவர் புரிந்துகொள்கிறார். பிஆர்எஸ் அரசு மாநிலத்தில் முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது, இது இளைஞர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. தெலுங்கானாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) அதிகரித்துள்ளது, மற்ற மாநிலங்களை விட புள்ளிவிவரங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன” என கவிதா தெரிவித்துள்ளார். மேலும் பேசியுள்ள கவிதா, “நாங்கள் எங்கள் மாநிலத்திற்காக உயிரைக் கொடுத்தோம். அடுத்த முறை நீங்கள் இங்கு வரும்போது, தோசைக் கடைக்குச் சென்று தோசை சாப்பிடாமல், தெலுங்கானா தியாகியின் தாயிடம் செல்லுங்கள்; அப்போது உங்களுக்கு வலி தெரியும், தெலுங்கானாவின் பிரச்சனை புரியும்.” எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.