எடப்பாடி பழனிசாமி தன்னுடன் போனில் பேசியதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரப்பப்படுவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். இது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகப்போவதாகவும், அதிமுக அணியில் இணையப்போவதாகவும் முன்பே பலமுறை தகவல்கள் றெக்கை கட்டி பறந்தபோதெல்லாம் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக ஒருக்காலும் இடம்பெறாது, பாஜகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம் எனக் கூறியிருந்தார் திருமா. இப்போது, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்த நிலையில், திமுகவில் இருக்கும் கட்சிகள் பக்கம் கொக்கியைப் போடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அந்த அடிப்படையில் தான், விசிக – அதிமுக கூட்டணியில் இணையப் போகிறதா என்ற ஐயங்களும் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் சென்னை நந்தனம், ஓய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும். அதுவே பாஜகவின் நோக்கம். ஆனால் அதற்கு தடைக்கல்லாக இருப்பது அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டம் தான். பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு, தாழ்வு பார்ப்பது தான் சனாதானம். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. தீட்டு கொள்கை வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்த பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிகவின் கொள்கை. சனாதனத்தை பின்பற்றுவது தான் மனுஸ்ருதி. அதற்கு எதிரானது தான் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம். கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக என அனைத்துக் கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாகவே இருக்கிறது. மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்று தான். நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும். 40 தொகுதியிலும் நமது கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதுவே விசிகவின் சபதம்.
நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். உடனே திமுகவை பலவீனமாக்குவதற்காக திருமாவளவன் திமுகவில் இருந்து விலகுவதாக வதந்திகளை பரப்பினார்கள். ஒரு சமூக இயக்கமாக இருந்துகொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது. பயிற்சி இன்றி யாரும் எந்த விளையாட்டிலும் வெற்றி பெற முடியாது. அரசியல் பல சூழ்ச்சிகள் நிறைந்த களம். அதில் வெல்ல பயிற்சி தேவை. திருமாவளவன் வெற்றி பெற்று விட்டால் போதும் என்று இருக்கக்கூடாது. 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.