தமிழ்நாட்டில் ஆரியம் – திராவிடம் கிடையாது: கவர்னர் ஆர்.என்.ரவி

திருச்சியில் பேசிய ஆளுநர் சுதந்திர தினத்தை கருப்பு தினம் என்று சொன்னவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் ஆரியம் – திராவிடம் கிடையாது என்று பேசினார்.

திருச்சியில் என்.ஆர் ஐஏஎஸ் அகாடமி நடத்திய மருது சகோதரர்கள் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றோர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட, கல்லூரிக்கே போகாத கால்டுவெல் தான் திராவிடம் என பிரித்துக் கூறியவர். கால்டுவெல்லை தான் திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறோம். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான ஆங்கிலேயர்களின் உத்திகளில் ஒன்றுதான் இது.

ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் சாதிய தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டுள்ளனர். காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி தலைவர்களாக ஆக்கியிருப்பார்கள். சுதந்திரத்தை கருப்பு தினம் என்று சொன்னவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஆரிய – திராவிட பிரச்னை காரணமாகவே சுதந்திர இயக்கம் பிளவுற்றது. தமிழகம் புண்ணிய பூமி. ரிஷிகளும், சித்தர்களும் பிறந்த பூமி. ஆனால், இங்கு ஆங்கிலேயரை கொண்டாடுகிறார்கள். மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள் கைகளில் சாதிக் கயிறுகளை அணிந்துகொண்டு செல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.