மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தேனியில் நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்படி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது விமானி இல்லாமல் கூட செல்லுவார் ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார். மோடியை கண்டு திமுக அச்சப்படுவதாக பாஜக கூறுகிறது. மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் குடும்பம் தான் வாழ்கிறது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். தமிழ்நாடு மக்கள் முழுவதுமே கலைஞர் குடும்பம் தான். உழைப்பால் உயர்ந்து உழைப்பின் மூலமே இன்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வைத்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பாஜகவின் அழுத்தத்தால் அதிமுக நீட் தேர்வை உள்ளே நுழைத்தது. தற்போது நீட் தேர்வு எதிர்ப்பில் எங்களுடன் துணை நில்லுங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கே வழங்கி விடுகிறோம். நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம். மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம். எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக அல்ல, மக்களுக்கானது. நீட் தேர்வு ரத்தானால் அதன் ஒட்டு மொத்த பெருமையையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.