புல்வாமா தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்தினார் மோடி: சத்யபால் மாலிக்

விமானங்கள் தராததால் தான் புல்வாமா சம்பவம் நடந்தது. அதோடு இந்த தாக்குதலை பிரதமர் மோடி 3 வது நாளிலேயே அரசியலாக பேச தொடங்கினார் என அந்த தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீரில் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்தார். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை அங்கு ஆளுநராக செயல்பட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் மத்திய அரசு மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதாவது, ‛‛சிஆர்பிஎப் வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே நடந்தது. சிஆர்பிஎப் வீரர்களை அழைத்து செல்ல விமானம் கேட்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்படவில்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் கொடுத்து இருந்தால் இந்த தாக்குதல் நடந்து இருக்காது என பிரதமர் மோடியிடம் கூறினேன். இது நமது தவறு என்றும் தெரிவித்தேன். ஆனால் பிரதமர் இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம். அமைதியாக இருக்கும்படி தெரிவித்தார்” எனக்கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புல்வாமா தாக்குதல், ஜம்மு காஷ்மீர் நிலவரம், அதானி விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் இன்டர்வியூ செய்தார். அப்போது புல்வாமா தாக்குதல் குறித்து ராகுல் காந்தி அவரிடம் கேள்விகள் கேட்டார். அதற்கு சத்யாபால் மாலிக் கூறியதாவது:-

புல்வாமா தாக்குதல் என்பது நமது தவறு என 2 சேனல்களுக்கு நான் சொன்னேன். அதோடு வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றேன். ஏனென்றால் அது விசாரணையை பாதிக்கலாம் என நினைத்தேன். ஆனால் விசாரணை என்பது இல்லை. மாறாக அந்த சம்பவம் என்பது தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. சம்பவம் நடந்த 3வது நாளில் அதனை பிரதமர் மோடி அரசியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார். புல்வாமா சம்பவம் ஏன் நடந்தது? மொத்தம் 5 விமானங்கள் கேட்கப்பட்டது. நான் பனியில் சிக்கிய மாணவர்களுக்கு விமானம் வழங்கினேன். டெல்லியை பொறுத்தமட்டில் விமானத்தை வாடகைக்கு எடுப்பது என்பது எளிமையான ஒன்று. ஆனால் விமானம் கேட்கும் விண்ணப்பம் என்பது உள்துறை அமைச்சகத்தில் 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இதனால் தான் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பற்ற சாலை என அறிந்தும் அதில் பயணப்பட்டனர். மேலும் சிஆர்பிஎப் வாகனத்தை தாக்கிய வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் என்பது சுமார் 10-12 நாட்கள் அந்த பகுதியல் சுற்றி திரிந்துள்ளது. வெடிப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை ஓட்டியவர் மற்றும் அதன் உரிமையாளரிடம் பயங்கரவாத தொடர்புகள் இருந்தன. அவர்கள் பல முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உளவுத்துறையின் கண்காணிப்பில் அவர்கள் இல்லை” என்றார்.

இதையடுத்து ராகுல் காந்தி கூறும்போது, ‛‛புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்கு நான் சென்றேன். அப்போது என்னை ஒரு அறைக்குள் அடைத்தனர். பிரதமர் மோடி அங்கு இருந்தார். அறையை விட்டு வெளியேற நான் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இது மிகவும் அருவருப்பான செயலாகும்” என்றார்.