அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தசரா பண்டிகையை ஒட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று அக்டோபர் 24ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராவண உருவ பொம்மை வத நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு மேடையில் நடந்த ராமாயண நாடக நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்த்து ரசித்தார். தொடர்ந்து, ராவண வதம் என்ற பெயரில் தீமையை நன்மை வெல்லும் என்பதை குறிக்கும் வகையில் ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கப்பட்டது. பின்னர், இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் விஜயதசமி மற்றும் நவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவானது தீமையை நன்மை வெற்றி காண்பதைக் குறிக்கிறது. நிலவுக்கு சந்திரயானை அனுப்பிய இரண்டு மாதங்களில் நாம் இந்த விஜய தசமியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்திய கலாச்சாரத்தின்படி இந்த நல்ல நாளில் ஆயுதங்களுக்கு பூஜை செய்யப்படுகிறது. ஆனால், அந்நிய மண்ணை ஆக்கிரமிப்பதற்கு பயன்படுத்துவதற்காக அல்ல, சொந்த மண்ணை காப்பாற்றப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆயுத பூஜை செய்யப்படுகிறது. அதேபோல் நாம் மேற்கொள்ளும் சக்தி பூஜை நம் நலனுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நலனுக்குமானது.
ஸ்ரீராமர், ராம ஜென்ப பூமியான அயோத்திக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர் தற்போது ராமர் கோயில் கட்டப்படுவதை நாம் காண்கிறோம். அது நாம் நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்த பொறுமைக்குக் கிடைத்த வெற்றி. அடுத்த ராம நவமி கொண்டாட்டங்கள் அயோத்தி ராமர் கோயிலில் நடைபெறும். இன்று ராவண உருவ பொம்மையை எரிக்கிறோம். இந்த நாளில் நாம் அத்துடன் சேர்த்து சாதியவாதம், பிராந்தியவாதத்தால் தேசத்தைப் பிரித்தாளும் சக்திகளையும் எரிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் ஒவ்வொரு சக்தியும் அழிக்கப்பட வேண்டும். நமக்கு கீதையின் நல்லறிவும் இருக்கிறது, ஐஎன்எஸ், தேஜஸ், விக்ராந்த்தை உருவாக்கும் அறிவியல் அறிவும் இருக்கிறது. விரைவில் உலகிலேயே மிகவும் வலுவான ஜனநாயக நாடாக இந்தியா வரும். இவ்வாறு அவர் கூறினார்.