அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இந்த நிகழ்வில் பங்கேற்பது தனது அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உத்தர பிரதேச அரசு மேற்பார்வையிட்டு வருகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை இன்னும் இரண்டு மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “இன்று உணர்வுப்பூர்வமான நாள். ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்துக்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்திக்கு வருமாறு என்னை அழைத்தனர். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பது எனது அதிர்ஷ்டம்” என்று பதிவிட்டுள்ளார்.