இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் சீன உளவு கப்பல்!

இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆராய்ச்சி என்ற பெயரிலான உளவு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பை வந்தடைந்துள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியாவை அதிநவீன உளவு கருவிகள் மூலம் இலங்கையில் இருந்து உளவு பார்ப்பது, கண்காணிப்பது என்பது சீனாவின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு இலங்கை அரசும் உடந்தையாக இருக்கிறது. இலங்கை பொருளாதார பேரழிவில் சிக்கி நடுத்தெருவில் நின்று அதிபர், பிரதமர் பதவி விலக வேண்டிய புரட்சி ஏற்பட்டது. அப்போது இந்தியாதான் நல்லெண்ண அடிப்படையில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி கொடுத்தது. ஆனால் சீனாவோ அப்போதும் குறுகிய கால கடன்களை கொடுத்து இலங்கையின் நிலப்பரப்பை அபகரிப்பதில் முனைப்பாக இருந்தது. இன்றளவும் இலங்கைக்கு இந்தியாதான் பேருதவி செய்து வருகிறது.

இலங்கை சிங்கள ஆட்சியர் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதை கொள்கையாக வைத்திருப்பர். இதனை தற்போது இந்தியாவுக்கு வந்து கடனுதவி பெற்று சென்ற ரணில் விக்கிரமசிங்கேவும் நிரூபித்துள்ளார். இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் ஷி யான் 6 எனும் உளவு கப்பலை கொழும்பில் நிறுத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே. கடல்சார் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறோம் என்கிற பொய் காரணத்துடன் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது சீன உளவு கப்பல்.

80 நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து புறப்பட்டது இந்த கப்பல். இந்திய பெருங்கடல் பகுதியில் முகாமிட்டு பல்வேறு உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்த சீன கப்பல். இதனைத் தொடர்ந்து இலங்கைக்குள் கடந்த மாதமே நுழைய திட்டமிட்டிருந்தது இக்கப்பல். ஆனால் இந்திய தரப்பில் மிக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சீன உளவு கப்பலின் இலங்கை வருகை தாமதமானது. இதனிடையே திடீரென சீனாவின் உளவு கப்பலுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அனுமதி கொடுத்தார். இதனால் உடனடியாக கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைந்து நங்கூரமிட்டு நிற்கிறது சீனாவின் உளவு கப்பல். கொழும்பு துறைமுகத்தில் இருந்த படியே இந்தியாவை கண்காணிக்கும் பணிகளை சீனாவின் உளவு கப்பல் மேற்கொள்ள இருக்கிறது.