வரும் 31ஆம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிமுன் அன்சாரி கூறியதாவது:-
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். முதல்வரின் பரிந்துரை குறித்து கவர்னர் இதில் எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இதற்கு வலிமையான ஒரு மாற்று என்பது அரசியல் சட்டம் சட்ட உறுப்பு எண் 161-வது அம்சமாகும். பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு, அமைச்சரவையில் அரசியல் சட்ட உறுப்பு எண் 161-ன் படி அன்றைய அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது போல ஒரு தீர்மானத்தை முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்திலும் நிறைவேற்றுங்கள் என்றும், இது உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெல்ல உதவும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில் எதிர்வரும் 31.10.2023 அன்று தமிழக அமைச்சரவை கூடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதில் தமிழ்நாட்டு நலனுக்காக பல்வேறு நல்ல முடிவுகள் எடுத்திட வாழ்த்துகிறோம். இத்தருணத்தில் 20 ஆண்டுகளை கடந்த சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறோம். சாதி, மத, வழக்கு பேதமின்றி, நாங்கள் சுட்டிக்காட்டும் 36 பேர் உட்பட, 20 ஆண்டுகளை கடந்த அனைவரையும் அரசியல் சட்ட உறுப்பு எண் 161-ன் கீழ் முன் விடுதலை செய்ய பரிந்துரைத்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய முயற்சி எடுக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்துகிறோம். இதுவே வலிமை மிக்கது என்பதால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இக்கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்.
இன்று நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கேட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மூ அவர்களை சந்தித்த தமிழக முதல்வர் அவர்கள், உணர்வுப்பூர்வமாக இவ்விவகாரத்தில் துரிதமாக முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டதை பார்த்தோம். அவரது உருக்கமான வேண்டுகோள் மனதை நெகிழச்செய்தது. அதே வார்த்தைகளில் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் எமது இக்கோரிக்கையையும் பரீசீலிக்க வேண்டும் என கோருகிறோம். மனிதாபிமானத்துடன்- திறந்த மனதுடன் எங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.