அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி அவர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமைறைவாக உள்ளார். இதனால் ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உடல் நிலையை காரணம் காட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது எனக்கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த 19 ம் தேதி வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார். அதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதோடு நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால், வரும் 30ம் தேதி இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் நாளை மறுநாள் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனு மீது விசாரிக்கும் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி அமர்வு அவரது ஜாமின் மேல்முறையீடு மனுவை விசாரிக்க உள்ளது. அன்றயை தினம் 61வது வழக்காக செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.