ஆளுநரின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, உடனடியாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர், ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசினார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதில், சில விஷமிகள், பெட்ரோல் குண்டுகளுடன் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் 1 வழியாக ராஜ் பவனுக்குள் நுழைய முயன்றனர். ஆளுநர் மாளிகை பாதுகாப்பு காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். அப்போது ஒரு பெட்ரோல் குண்டை பிரதான நுழைவாயில் பகுதியில் வீசியுள்ளனர். அந்த குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து காவலர்கள் அந்த நபர்களை பிடிக்க முயன்ற நிலையில், மீண்டும் மற்றொரு பெட்ரோல் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியது.
ஆனால், ஆளுநர் மாளிகையின் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மறுப்பு அறிக்கை வெளியிட்டார். ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில், அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கருக்கா வினோத்தை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு டி.ஜி.பி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர். அப்போது சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் நந்தனத்தில் இருந்து சைதாப்பேட்டை பாலம் வழியாக ஆளுநர் மாளிகை சாலையில் கருக்கா வினோத் தனியாக நடந்து வரும் காட்சி வெளிடப்பட்டது. கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாக கூறியது உண்மைக்குப் புறம்பானது என்றும், ஆளுநர் மாளிகை நுழைவாயில் எரித்து சேதப்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது உண்மைக்குப் புறம்பானது என்றும் தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் கருக்கா வினோத்தை ராஜ்பவன் ஊழியர்கள் பிடித்ததாக கூறியதும் உண்மை அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டுகளை வைக்கும் படங்களும், அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, பிடிக்கும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகை வெளியிட்ட தகவல்கள் அனைத்துக்கும் மறுப்பு தெரிவித்து, அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறை தரப்பில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், மயிலாடுதுறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்று கொண்டிருக்கும் போது கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் ஆளுநரின் வாகனம் மீது வீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை தெரிவித்த குற்றச்சாட்டுகளை போலீஸ் தரப்பு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆளுநரின் குற்றச்சாட்டு பொய்யானது என்று தமிழ்நாட்டின் காவல்துறை நிரூபித்துள்ளது. யாருடைய தூண்டுதலின் பேரில் ஆளுநர் செயல்பட்டு, தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முனைகிறார்? தமிழ்நாட்டு மக்களின் மீது துளியும் அக்கறையில்லாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டு வைப்பதன் மூலம் மிகவும் மலிவான அரசியல் செய்ய முயற்சிக்கிறார். ஆளுநரின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, உடனடியாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.