ரூ 200 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மிரட்டல்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ 20 கோடி கேட்ட மர்ம நபர்கள் தற்போது ரூ 200 கோடி கொடுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.

உலக பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவரது வீடு உலகிலேயே விலை மதிப்புள்ள வீடுகளில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 22 மாடிகளை கொண்ட கம்பீர கட்டடமாக இந்த அன்டீலியா வீடு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தனது இளைய மகனுக்கு முகேஷ் அம்பானி திருமணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஈமெயில் வந்தது. அந்த ஈமெயிலில் நீங்கள் எங்களுக்கு ரூ 20 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் உங்களை சுட்டுக் கொன்று விடுவோம். எங்களிடம் இந்தியாவிலேயே சிறப்பு துப்பாக்கிச் சூடு நடத்தும் நிபுணர்கள் உள்ளனர். அவர்களை கொண்டு சுட்டுக் கொன்றுவிடுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இதுகுறித்து தெற்கு மும்பையின் காம்தேவி காவல் நிலையத்தில் அம்பானியின் பாதுகாவலர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முகேஷுக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஏற்கெனவே அவருக்கு மிரட்டல் விடுத்த நபர்களே அனுப்பியிருந்தனர். நாங்கள் 20 கோடி கேட்டோம். எங்கள் மெயிலுக்கு நீங்கள் ரிப்ளை செய்யவில்லை. அதனால் ரூ 200 கோடி கொடுத்தால் உங்களை விட்டுவிடுவோம். இல்லாவிட்டால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என மெயில் அனுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 2021 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஒரு ஸ்கார்பியோ கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. வெடிக்கும் தன்மை கொண்ட அந்த ஜெலட்டின் குச்சிகள் சுரங்கம் வெட்டும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவை. அவை தவிர, முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அந்தக் காரில் இருந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமாராக்களை ஆராய்ந்தபோது, மர்ம நபர் ஒருவர் அந்தக் காரை முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. அவரை போலீஸ் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் அந்தக் காரின் உரிமையாளர் மனுசுக் ஹிரென் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் மும்பையின் தானே என்ற பகுதியில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கல்வா ஆற்றில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.