கத்தாரில் 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர்

உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். அப்போது, “இந்த வழக்குக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் ” என்று தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன். அப்போது, அரசு இந்த வழங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை எடுத்துரைத்தேன். அந்தக் குடும்பத்தினரின் வலிகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். கூடவே 8 பேரையும் விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை, இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை, கத்தார் உளவுத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமைச் சிறையில் இருந்து வந்தனர். இது தொடர்பான வழக்கு அக்.26 வியாழக்கிழமை கத்தார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கத்தார் நாட்டில் பணிபுரிந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.