கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை ஆஜராகி, நீதிபதி கண்ணன் அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், கொள்கைகளை வகுக்கும்போது மாணவிகளின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் எனவும் கூறி கலாஷேத்ரா வகுத்துள்ள கொள்கை விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
இதன்பின் கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, கலாஷேத்ரா வகுத்துள்ள கொள்கைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி கண்ணன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், வழக்கின் விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.