இப்போது இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முன்பு மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. இளைஞர்கள், அவ்வளவு ஏன் சிறியவர்கள் மத்தியிலும் கூட மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் இதுபோல ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் கூட யாருக்கும் உறுதியாக என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், அப்போது இந்த விவகாரத்தில் தங்களிடம் எந்தவொரு தரவுகளும் இல்லை என மத்திய அரசு கூறிவிட்டது. இருப்பினும், அது குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதற்கிடையே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை நடத்தியுள்ள நிலையில், அதைக் குறிப்பிட்ட அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாரடைப்பிற்கான காரணத்தை விளக்கினார். கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்றும் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த நவராத்திரி விழாவில் நடந்த ‘கர்பா’ நடனத்தின் போது அடுத்தடுத்து பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டது. குறிப்பாகப் பதின்ம வயதில் இருப்போருக்கும் கூட மாரடைப்பு ஏற்பட்டது. இது மட்டுமின்றி நாடு முழுக்கவே இளைஞர்கள் மத்தியிலான மாரடைப்பு கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது மாரடைப்பு, விளையாடும் போது மாரடைப்பு என்று இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரித்தே வந்தது. கொரோனாவுக்கு பிறகு இந்த மாரடைப்பு அதிகரித்துள்ள நிலையில், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. எங்கு கொரோனாவால் பாதித்த அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுமோ என்று அஞ்சினர்.
இந்தச் சூழலில் தான் மன்சுக் மாண்டவியா இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஐசிஎம்ஆர் இது குறித்த விரிவான ஆய்வை நடத்தியது. அதன்படி கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான வேலை செய்யக் கூடாது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க, கடினமான உடற்பயிற்சி வேகமாக ஓடுவது, ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஓரிரு ஆண்டுகள் இதுபோல கடுமையாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.