மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி புதிய மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கு, அக்.17ம் தேதி தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.338 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான தரவுகள் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ளதால் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே இந்த வழக்கின் விசாரணையை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் முடிப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணை மந்தமாக சென்றால் மணீஷ் சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

முன்னதாக அக்.17ம் தேதி நடந்த விசாரணையின் போது, “மதுபான ஊழல் குற்றச்சாட்டில் மணீஷ் சிசோடியாவுக்குத் தொடர்பு இருக்கிறது, இந்த ஊழல் மூலம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பணம் சென்றது என்பதை நீங்கள் மறுக்கமுடியாத ஆதாரத்துடன் நிறுவ வேண்டும். அதனை நிறுவுவது மிகவும் கடினம் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அதில் தான் உங்களின் திறமை இருக்கிறது” என்று அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகளாலும், மார்ச் மாதம் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். டெல்லி யில் கடந்த 2021-22ல் அமல்படுத்தப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ள மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக மணீஷ் சிசோடியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.