மராத்தா ஜாதியினரின் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் 2 எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மண்ணின் மக்களான மராத்தா ஜாதியினர் நீண்டகாலமாக இடஒதுக்கீடு போராடி வருகின்றனர். 2018-ம் ஆண்டில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமாக நடந்தது. அப்போது இடஒதுக்கீடு கோரி 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்தனர். இதனால் அப்போது மராத்தா சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெடித்திருக்கிறது. மராத்தா சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, ஆகஸ்ட் மாதம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது பெரும் சர்ச்சையானது. அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு குறித்து உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியை நிறைவேற்ற அக்டோபர் 24-ந் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா அரசு தங்களது வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில் மனோஜ் ஜராங்கே மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார். இதனால் மராத்தா சமூகத்தினர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
மராத்தா சமூக இடஒதுக்கீட்டை எதிர்க்கும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், மராத்தா இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த இருவருமே மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதேபோல பல எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து வருவதால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.