81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய ஹேக்கர்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்த 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் கசிய விடப்பட்டு இருப்பது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தகவல் கசிவாக பார்க்கப்படுகிறது.

pwn001 என்ற ஹேக்கர் ஒருவர் டார்க் வெப்பில் 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். கொரோனா பரிசோதனையின்போது இந்திய மக்களிடம் பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் உள்ளது. அந்த தகவல்கள் கசியவிடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எங்கிருந்து இவை அனைத்தும் கசிந்தது என்பது உறுதிபடுத்தப்படவில்லை. இது தொடர்பாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளது.

ஹேக்கரால் டார்க் வெப்பில் கசியவிடப்பட்ட தகவலில் 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் தகவல்கள், பாஸ்போர்ட் விபரங்கள், அவர்களின் பெயர்கள், வயது, தொலைபேசி எண்கள், நிரந்தர மற்றும் தற்காலிக இருப்பிட முகவரிகள் போன்றவை கசியவிடப்பட்டு உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான (ICMR) இடம் இருந்து கசியவிடப்பட்டதாக அந்த ஹேக்கர் தெரிவித்து உள்ளார். அவரை கொரோனா பரிசோதனையின்போது பெறப்பட்ட தகவல்கள் என அவர் தெரிவித்து இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரீசெக்யூரிட்டிதான் இந்த மிகப்பெரிய தகவல் கசிவை முதலில் கண்டுபிடித்தது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி pwn0001 பெயர் கொண்ட ஹேக்கர் இந்த தகவல்களை கசியவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

அக்டோபர் 9 ஆம் தேதி 81.5 கோடி இந்தியர்கள் தகவல்கள் கசியவிப்பட்டு உள்ளதாக அவர் விளம்பரம் செய்து இருக்கிறார். இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு லட்சம் ஆவணங்கள் கசியவிடப்பட்டதாக ரீசெக்யூடிட்டி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் நம்பகத்தன்மையை. அதார் தகவல்களை வைத்து உறுதிபடுத்தி “வெரிபை ஆதார்” என்ற அம்சத்தை பயன்படுத்தி உறுதிபடுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக CERT In எனப்படும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா அமைப்பும் ஐ.சி.எம்.ஆரை எச்சரித்து இருக்கிறது. இந்த கோவிட் தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய தகவல் மையம் போன்றவற்றுடனும் பகிரப்பட்டு உள்ளது. எனவே எங்கிருந்து இந்த தகவல்கள் கசியவிடப்பட்டன என்பதை கண்டறிவதில் சிரமம் தொடர்கிறது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான ஐசிஎம்ஆர் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.