டெல்லி கலால் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக நவம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதற்கு டெல்லி மந்திரி அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி மந்திரி அதிஷி மர்லினா, “ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு பயந்து, பஞ்சாப் மற்றும் டெல்லியில் அரசு செய்யும் வேலைகளை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது.. அதனால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறைக்கு அனுப்ப பார்க்கிறார்கள். கட்சியை முடிக்க நினைக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.