இனி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: டிகே சிவக்குமார்

தமிழகத்துக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 15 வரை 2,600 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும். தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரையின் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும். இந்நிலையில் தான் அக்டோபர் 13ம் தேதி காவிரி நீர் லோண்மை ஆணையம் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்டோபர் 30ம் தேதி வரை திறக்க உத்தரவிட்டது. இதனடிப்படையில் தமிழகத்துக்கு குறைந்த அளவிலான நீரை மட்டுமே கர்நாடகா திறந்து விட்டது.

இதையடுத்து இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடகா முறையாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடகா அரசு தரப்பில் கர்நாடகாவில் போதிய தண்ணீர் இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்க கூடாது என கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.

இதுபற்றி அம்மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கூறினார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கேஆர்எஸ் அணைக்கான நீர்வரத்து என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது. கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து 815 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மொத்தம் 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது கர்நாடகாவில் குடிநீர் தேவைக்கு வேண்டும். இதனால் தமிழகத்துக்கு திறக்கும் அளவுக்கும் கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இதனால் மழை வேண்டி கடவுளிடம் வேண்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.