கேரள மாநிலத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு விவகாரத்தை மத அடிப்படையில் திசை திருப்ப முயன்ற மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது களமச்சேரி பகுதி. கொச்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இப்பகுதியில் உள்ள சாம்ரா என்ற பிரார்த்தனைக் கூடத்தில் கடந்த ஞாயிறு காலை 10 மணி அளவில் கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவான யெகோவாவின் சாட்சிகளை பின்பற்றுபவர்களின் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுமார் 2,000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர். அனைவரும் கண்களை மூடி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. தொடக்கத்தில் ஸ்பீக்கர் வெடித்ததாக கூறப்பட்ட நிலையில் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்ற மக்கள் தங்கள் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள பதறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஒடினர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10 பேருக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், அதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. குண்டு வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலால் 50 க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த உடனே ஒரு தரப்பினர் ஹமாஸ் அமைப்பை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். உடனே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொண்டு, என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அந்த நாளிலேயே அதே யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த டொமினிக் மார்ட்டீன் என்பவர், திரிச்சூர் காவல் நிலையத்தில் ஆஜராகி இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நான் தான் என ஒப்புக்கொண்டார். இதற்கிடையே குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் பாலஸ்தீனுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய ஜியோனிஸ்டுகளை எதிர்த்தும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, ஜியோனிஸ்டுகளை அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் எனவும், அக் அக்சா மசூதிக்காக போராடும் காசா மக்களுக்காக போராட வேண்டும் என்றார். பினராயி விஜயனின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து பேசினார்கள். அவர்களின் மதவாத கொள்கையின் ஒரு பகுதி இது. இத்தகைய கருத்துக்களை அவர்களால் எப்படி கூற முடிகிறது. மக்கள் தவறாக வழிநடத்தப்படும் அபாயம் உள்ளது. மத ரீதியாக இதை திசை திருப்ப முயன்ற மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த களமச்சேரி குண்டு வெடிப்பு தொடர்பாக கருத்து கூறிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.