மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரே நகரில் போலீசார் மீது குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 போலீசார் படுகாயமடைந்தனர். இதனால் மோரே நகரில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மக்கள் 53% வசிக்கின்றனர். குக்கி, நாகா இன மக்கள் 40% இருக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்க்க அம்மாநில உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதனையடுத்து மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு, மைத்தேயி மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பழங்குடிகள் பட்டியலில் உள்ள குக்கி, நாகா மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 6 மாதங்களுக்கு முன்னர் வன்முறை வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தில் 6 மாதங்களாக நீடிக்கும் வன்முறையால் ஒட்டுமொத்தமாக மாநிலமே மைத்தேயி/ குக்கி இன மக்கள் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த வன்முறைகளில் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகி உள்ளனர். இந்த வன்முறை இன்னமும் ஓயவில்லை.
மணிப்பூரில் மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ளது மோரே நகரம். இங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு குக்கி-ஜோ பழங்குடிகள் பெரும்பான்மையினராக உள்ளனர். மோரேவில் ஹெலிபேட் அமைக்கும் பணியை போலீஸ் அதிகாரிகள் குழு பார்வையிட சென்றது. அப்போது ஆயுதம் ஏந்திய குக்கி பழங்குடிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் உயர் அதிகாரி ஆனந்த் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மோரே சுற்றிய பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் குக்கி பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 போலீசார் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து மோரே நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து முதல்வர் பிரேன்சிங் அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். மோரே வன்முறைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குக்கி பழங்குடிகள் தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ50 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.