அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல் துறை டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய தசமி மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு அக்.22 மற்றும் அக்.29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அக்.22 மற்றும் அக்.29 ஆகிய நாட்களில் 33 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி-க்கள் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சீருடை அணிந்தவர்களை மட்டுமே அணிவகுப்பு ஊர்வலத்தில் அனுமதிக்க வேண்டும். போலீஸாரின் நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தீவிரமாக பின்பற்றி அமைதியான முறையில் செல்ல வேண்டும். போலீஸார் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அக்.22-ல் நடக்கும் அணிவகுப்பு ஊர்வலத்தின் வழித்தடத்தை அக்.20-ம் தேதிக்குள்ளாகவும், அக்.29-க்கான வழித்தடத்தை அக்.24-ம் தேதிக்குள்ளாகவும் போலீஸாரிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை எனக்கூறி ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, “நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே, இந்த மனுவின் மீது வாதிட அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
அப்போது, காவல் துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, “இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக் காட்டுகிறது. இந்தச் செயல் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்க விரும்பாததையே காட்டுகிறது என்று அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில், உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் 4 வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.