பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மிசோரமில் பழங்குடியின மக்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து அவர்களுடைய நண்பர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகின்றன. அதனை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் மிசோரம் குறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பழங்குடியினரிடம் இருந்து நிலங்களைப் பறிக்க பாஜக முயன்று வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மிசோரமில் பழங்குடியின மக்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து அவர்களுடைய நண்பர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றன. மிசோ தேசிய முன்னணி மற்றும் சோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற முகவர்களாக செயல்படுகின்றன.
1986-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் மிசோரமில் அமைதியை நிலைநாட்டியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. மிசோரமின் வளர்ச்சியே காங்கிரசின் குறிக்கோளாகும். ஆனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை பன்மைத்துவத்துக்கும், வளர்ச்சிக்கும் எதிரானவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.