திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை மக்களவை நெறிமுறைக் குழு இன்று விசாரணை செய்த நிலையில், அந்தக் குழு நடந்துகொண்ட விதத்தில் அதிருப்தி அடைந்த மஹுவா மொய்த்ரா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கொடுத்த புகாரின் அடிப்படையில், அதுகுறித்த விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை நேரில் ஆஜராகும்படி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவை நெறிமுறைக் குழு சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதற்காக மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்துக்குச் சென்றார். நெறிமுறைக் குழு கூட்டப்பட்டதும் விசாரணைக்கு ஆஜரானார். முதலில் குழுவுக்கு கிடைக்கப் பெற்ற ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து பெற்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., “நெறிமுறை குழுவுக்கு மஹுவா மொய்த்ரா இப்போது ஒரு சாட்சியாக வந்துள்ளார்; எம்.பி.யாக இல்லை” என்று நினைவூட்டினார்.
அப்போது, ‘தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் எனது நாடாளுமன்ற இணையதள பாஸ்வேர்டை பகிர்ந்ததன் மூலமாக நான் நாடாளுமன்றத்தின் எந்த ஒரு விதியையும் மீறவில்லை’ என்று மஹுவா தெரிவித்ததாக தகவல்கள் கூறின.
இதனிடையே, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பிய குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரும் விசாரணையின் பாதியிலேயே வெளியேறினர். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டானிஷ் அலி கூறுகையில், “மஹுவாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் திரவுபதி துகிலுரிதல் படலம் போல இருந்தது. மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தப்பட்ட விதம் கண்டனத்துக்குரியது. நெறிமுறைக் குழுவின் தலைவர், மஹுவாவிடம் அவரது சொந்த தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டார். அவை சகிக்க முடியாதவையாக இருந்தன” என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. கிர்தாரி யாதவ், “அவர்கள் ஒரு பெண்ணிடம் (மஹுவா மொய்த்ரா) அவரின் தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேட்டனர். தனிப்பட்ட விஷயங்களைக் கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை. அதனால் நாங்கள் வெளிநடப்புச் செய்தோம்” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், “அவர் (நெறிமுறைக் குழுத் தலைவர்) கேட்ட அனைத்துக் கேள்விகளும் அவர் யாரோ ஒருவரின் நலன் கருதி செயல்படுகிறார் என்பதாகவே உணர்த்தியது. இது மிகவும் மோசமான விஷயம். நாங்கள் இரண்டு நாட்களாக குழுத் தலைவரிடம் சில விஷயங்களைக் கேட்கிறோம். அவர்களோ மஹுவாவிடம் ‘நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள்? எங்கே சந்தித்துக் கொண்டீர்கள்? உங்களின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளைத் தர முடியுமா?’ என்றெல்லாம் கேட்டனர். பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஓர் ஆதாரமும் அவர்களிடம் இல்லை” என்று தெரிவித்தார்.
விசாரணையில் இருந்து வெளியேறிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்ன மாதிரியான கூட்டம் இது? அவர்கள் எல்லா வகையான அசிங்கமான கேள்விகளையும் கேட்கின்றனர். அவர்கள் எதையெல்லாமோ எடுத்துவைத்து, எதையெல்லாமோ பேசுகிறார்கள். உங்கள் கண்களில் கண்ணீர் கோர்த்திருக்கிறது என்று கூறுகிறார்கள். என் கண்களில் கண்ணீர் இருக்கிறதா?” என்று இரு கண்களையும் விரித்துக் காட்டியபடி கேட்டார். மஹுவா மொய்த்ரா, எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளியேறிய பின்னரும் நெறிமுறைக் குழு தனது விசாரணையைத் தொடர்ந்தது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து மஹுவா மீது புகார் தெரிவித்திருந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கூறுகையில், “அவர் (மஹுவா மொய்த்ரா) பொதுவெளியில் ஒரு தவறான கருத்தினை உருவாக்க முயல்கிறார். பட்டியல் பிரிவினைச் சேர்ந்தவரான வினோத் சோன்கர் நெறிமுறைக் குழுவின் தலைவராக இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு எதிராக அநாவசியமான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். மஹுவா நெறிமுறைக் குழு விசாரணையின்போது என்ன நடந்தது என்று ஊடகங்களுக்கு பேட்டி தருகிறார். பொதுவெளியில் ஒரு தவறான தகவல்களைத் தருகிறார். இன்று நடந்தது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும்” என்று தெரிவித்தார்.
மக்களவை நெறிமுறைக் குழு தலைவர் வினோத் சோன்கர் கூறுகையில், “பதில் சொல்வதற்கு பதிலாக அவர் (மஹுவா) கோபமடைந்து குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பார்த்து பயன்படுத்தக் கூடாத (unparliamentary) வார்த்தைகளைப் பயன்படுத்தினார். டானிஷ் அலி, கிர்தாரி யாதவ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நெறிமுறைக் குழு மீது குற்றம்சாட்டி வெளிநடப்புச் செய்தனர். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை குழு அமர்ந்து பேசி முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி வினோத் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.வைத்தியலிங்கம், டானிஷ் அலி, சுனிதா துக்கல், அப்ராஜித சாரங்கி, பிரனீத் கவுர், ஸ்வாமி சுமிதானந்த் ராஜ்தீப் ராய் உள்ளிட்டோர் இருந்தனர்.