பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா!

பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன். பாஜக தேசிய மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். பாஜகவில் செல்வாக்கு மிக்க பெண் தலைவராகவும் உள்ளார் வானதி சீனிவாசன். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள வானதி சீனிவாசன், அரசியல் ரீதியான கருத்துக்களை அதிரடியாக கூறி வருகிறார். மேலும் திமுகவின் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். மேலும் பாஜக கொடிக் கம்ப விவகாரத்திலும் பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்படுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார் வானதி சீனிவாசன்.

இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு நேற்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார் வானதி சீனிவாசன். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் அவரது உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.