ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மாணவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தமிழ்நாட்டை தாண்டி பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்கிறார்கள். டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவின் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் எந்த மாநிலத்தவரும் மருத்துவம் படிக்க முடியும். அதனால் தான் மாநிலம் விட்டு மாநிலம் சென்று பலரும் மருத்துவம் படிக்கிறார்கள். குறிப்பாக முதுநிலை மருத்துவ படிப்புகளை பலரும் வெளிமாநிலங்களில் சென்று படிக்கிறார்கள்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புகழ் பெற்ற ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் விடுதியில் தங்கி, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் குமார் தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியின் விடுதியில், ஹாஸ்டல் எண் 5ல் உள்ள அறை எண் 69ல் டாக்டர் மதன்குமார் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக ராஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் மதன்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேநேரம் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மருத்துவர் மதன் குமார் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யாரோனும் கொன்று எரித்து வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டாக்டர் மதன்குமார் கொல்லப்பட்டது உறுதியானது. டாக்டர் மதன் குமார் முதலில் விடுதியின் மேல்மாடியில் கொல்லப்பட்டிருக்கிறார், பின்னர் அவரது உடலை எரிக்க முயற்சித்தவர்கள், விடுதியின் பின்புறமுள்ள முட்புதரில் அவரது உடலை வீசிவிட்டு தீ வைத்து கொளுத்தி உள்ளார்கள். விடுதியின் மேற்கூரையில் மொபைல் மற்றும் கால்தடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடய அறிவியல் சோதனைக்கு போலீசார் அதனை அனுப்பி உள்ளனர்.