தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுவதாக கூறி ரிட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனுவை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார். மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் தேவையில்லாத காலதாமதம் செய்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.