இலங்கை தமிழர் விழாவில் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை: வைகோ கண்டனம்!

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை காபி ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பிரிட்டிசாருக்குத் தேவையான விவசாயம் உற்பத்தி சார்ந்த துறைகளில் உழைப்பதற்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு கொண்டு போகப்பட்டார்கள்.

தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டார்கள். பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.

இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த, இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டிலிருந்தும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக மலையகத் தமிழர்களின் ‘நாம் 200’ விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார். அந்த உரையில், “மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள்! மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு – இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகாலம் முதல் தொடங்குகிறது.
1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. காப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காப்பி தோட்டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான். இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.

“கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்!” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி, அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில், மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காணொலி உரையை ஒளிபரப்ப கூடாது என்று மத்திய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இன்று வெளியான இந்து ஆங்கில நாளேடு (06.11.2023)விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.