“ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று மசோதாக்கள் தேக்கம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், “ஆளுநர்கள் தங்கள் கடமையைச் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவது மிகவும் தீவிரமான பிரச்சினை. அவற்றை உற்று நோக்க வேண்டும். கட்சிகள் எதற்காக இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடும்படி தள்ளப்பட வேண்டும்? அரசியல் சாசனம் பிறந்த காலத்தில் இருந்தே நாம் ஜனநாயகமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினைகள் எல்லாம் ஆளுநர்களும் – மாநில முதல்வர்களுமே தீர்க்க வேண்டியவை அல்லவா? அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அனைத்தும் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்துவதற்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, பஞ்சாபில் ஆட்சி செய்யும் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இதுவரை நிறைவேற்றி அனுப்பிய 27 மசோதாக்களில் 22 மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி, நான்காவது பட்ஜெட் கூட்டத் தொடரின் சிறப்பு அமர்வின்போது நிறைவேற்றி அனுப்பிய மூன்று நிதி மசோதாக்களை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையில் புதிய மோதல் வெடித்தது.
இதனிடையே, முதல்வர் பகவந்த் மானுக்கு கடிதம் எழுதிய சில நாட்களுக்கு பின் நவ.1-ம் தேதி இந்த மூன்று நிதி மசோதாக்களில் இரண்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். தனது கடிதத்தில் ஆளுநர், சட்டப்பேரவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அவற்றை நான் ஆய்வு செய்வேன் என்று தெரிவித்திருந்தார். முன்னதாக, அக்.19-ஆம் தேதி ஆளுநர் புரோகித், பஞ்சாப் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் மூன்று நிதி மசோதாக்களையும் நிறுத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். இத்துடன் அக்.20-21 தேதிகளில் நடந்த சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட பஞ்சாப் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (திருத்தம்) மசோதா 2023, பஞ்சாப் சரக்கு மற்றும் சேவை (திருத்தம்) மசோதா 2023 மற்றும் இந்திய முத்திரை (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2023 ஆகியவற்றையும் நிறுத்திவைத்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆளுநர் தன்னிடம் அனுப்பப்பட்ட அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருவாதாகவும், மாநில அரசு தேவையில்லாமல் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும்” கூறினார்.
அப்போது, “இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பே ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு வழக்குகள் வரும்போது மட்டுமே ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பஞ்சாப் ஆளுநர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்த தற்போதைய விவரங்களை தாக்கல் செய்யுமாறு சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கினை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்கள் ஆளுநர் பிரச்சினையில் நீதிமன்றத் தலையீட்டைக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளன. ஆளுநர்கள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. அகையால், ஆளுநர்கள் கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘மசோதாக்கள், அரசாணைகளை ஆளுநர்கிடப்பில் போடுகிறார்’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதே நிலை கேரளாவிலும் உள்ளது. அதனால் கேரள அரசும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.