தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி சதமும் (101 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் 77 ரன்னும் அடித்து அசத்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெற்ற 8வது வெற்றி இதுவாகும்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய கிரிக்கெட் அணி, மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். அருமையான இன்னிங்ஸ் ஆடிய விராட் கோலிக்கு, சிறப்பான பிறந்தநாள் பரிசாக இந்த ஆட்டம் அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.