பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் அடித்தது பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர் செய்தது சரிதான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் பாஜக பிரமுகரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார். நேற்று முன்தினம் சென்னையில் அரசுப் பேருந்தில் படிகட்டில் தொற்றியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை நடுரோட்டில் வைத்து கன்னம் பழுக்கும் அளவுக்கு அறைந்தார் ரஞ்சனா. மேலும், இதுகுறித்து தட்டிக்கேட்ட பஸ் கண்டெக்டரை தகாத வார்த்தைகளாலும் அவர் வறுத்தெடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது சம்பந்தப்பட்ட பஸ் கண்டெக்டர் புகார் அளித்தார். இதன்பேரில், நேற்று அதிகாலையிலேயே போலீஸார், ரஞ்சனா நாச்சியார் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அன்றைய தினம் மாலையே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே, ரஞ்சனா நாச்சியார் செய்தது சரிதான் என்று பாஜகவினர் உட்பட பொதுமக்கள் சிலரும், அவர் எப்படி அடுத்தவர்களின் பிள்ளைகளை அடிக்கலாம் என ஒருதரப்பும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சீமானிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “தங்கச்சி ரஞ்சனா நாச்சியார் செய்ததை சரியானது என்றுதான் நான் பார்க்கிறேன். அவர்கள் செய்த முறை சரிதான். ஆனாலும் நடந்துகொண்ட முறை கொஞ்சம் அதிகமாகி விட்டது. அவங்க நோக்கம் சரிதான். படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது; தடுமாறி கீழே விழுந்துட்டா உயிர் போயிரும் என்ற அவரது நோக்கத்தில் தவறு கிடையாது. என்ன.. கொஞ்சம் அன்பா சொல்லி இருக்கலாம். நான் கூட முதலில் அந்த வீடியோவை பார்க்கும் போது அவங்க போலீஸ்னு தான் நினைச்சேன். அப்புறம்தான், அவங்க பாஜக பிரமுகர்னு தெரியவந்துச்சு” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர், “ரஞ்சனா நாச்சியார் விஷயத்தில் இவ்வளவு துரிதமாக செயல்படும் போலீஸார், சாதாரண ஆட்கள் புகார் அளித்தால் மந்தகதியில் செயல்படுவதாக மக்கள் கூறுகிறார்களே..” எனக் கேட்டார். அதற்கு சீமான் பதிலளிக்கையில், “நீங்க கேட்டதால் சொல்றேன். மக்களுடைய வழக்குகள் லட்சக்கணக்கில் நீதிமன்றங்களில் தேங்கி இருக்கு. உங்களுக்கு தெரியும். ஆனால், ஏதாவது அரசியல் வழக்கில், இந்தச் சின்னத்தை எந்த அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் எவ்வளவு வேகமாக முடித்து வைக்கிறது என்பதை நாம் பாக்கிறோம். காலையில் வழக்கு தொடுத்தால் மாலையில் தீர்ப்பு கிடைக்கிறது. இந்த பொதுக்குழு தீர்மானம் செல்லுமா செல்லாதானு ஒரு வழக்கு போனால், சில மணிநேரங்களில் தீர்ப்பு கிடைத்துவிடுகிறது. அதே சாதாரண மக்களின் வழக்கில் இவ்வளவு வேகமாக தீர்ப்பு கிடைக்குமா? அப்போ எங்கே இருக்கு நீதி? எங்கே இருக்கு நியாயம்? இதுதானே இங்கே இருக்குற பிரச்சினை” என சீமான் கூறினார்.