எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
நேற்றைய மாலை என் மக்கள் என் பயணம், புற நானூற்றில் ஒல்லையூர் என்றழைக்கப்பட்ட, பிரகதாம்பாள் அம்மன் குடி கொண்டிருக்கும் புதுக்கோட்டை மண்ணில், மாபெரும் மக்கள் திரள் சூழ சிறப்பாக நடந்தேறியது. நமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், மாண்புமிகு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்கள், தமது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைத்தார். 100 ஏக்கர் நிலம் கொண்ட மன்னரின் அரண்மனையும், புதுக்கோட்டை மாவட்டமாக உருவாக்கப்பட்ட போது, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத் தொண்டைமான் ஒப்படைத்தார். 100 ஏக்கர் நிலம் கொடுத்த அவருக்கு மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் கட்ட 2 ஏக்கர் நிலம் கொடுக்க திமுக அரசு யோசிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று பாஜக சார்பில் இதைப் பற்றி ஒரு அறிக்கையை நான் வெளியிட்டிருந்தேன். இதுவரை திமுக பதிலளிக்கவில்லை.
தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தியில் (GSDP) புதுக்கோட்டை மாவட்டத்தின் பங்களிப்பு வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. இந்த மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால், புதுக்கோட்டை வளர்ச்சியடையாமல் இருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மீனவர் நலனுக்காக முதல் முறையாக மத்திய அரசில் புதிய துறையை 2019 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை ரூ 617 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் மத்சய சம்பதா திட்டங்கள் மூலம் 1356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,84,457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,42,458 மீனவர்கள், மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளது. 47,594 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,64,506 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,43,184 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,64,792 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 75,667 பேருக்கு பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, 1,28,995 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2556 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம். பாஜக இந்த சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கும்.
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இதை சரி செய்து, வேலைவாய்ப்புகள் வழங்க இந்த மாவட்டத்தின் இரண்டு திமுக அமைச்சர்கள் ஒன்றுமே செய்யவில்லை. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும், விராலிமலை, கீரனூர், கந்தர்வகோட்டையில் உழவர் சந்தை அமைக்கப்படும், அறந்தாங்கியில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும், புதுக்கோட்டை நகராட்சிக்குப் புதிய கட்டடம் கட்டப்படும், கரம்பக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும், கொள்ளிடம் உபரிநீர் திட்டம் குன்றாண்டார் கோயில் வரை நீட்டிக்கப்படும், ஆலங்குடி கீரமங்கலத்தில் நறுமணத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும், பொன்னமராவதி, ஆலங்குடி, பேரூராட்சிகள், நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கரம்பகுடிக்கு விரிவுபடுத்தப்படும் என்றுக்கூறி ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். வரும் பாராளுமன்ற தேர்தலில், கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையுமே நிறைவேற்றாத திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்கள் தொடர, பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.