தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கம் பெரியார் சிலைதான் முதலில் அகற்றப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீரங்கத்தில் நேற்று பேசிய அண்ணாமலை, 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே ஶ்ரீரங்கம் கோவிலில் ஒரு பலகையை வைத்திருக்கின்றனர். கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீங்கன்னு தமிழகத்தில் இருக்கிற எல்லா கோவில்களிலும் இதேபோல ஒரு கம்பத்தை வைத்து பலகையை வைத்துள்ளனர். ஆனால் இந்துக்கள் நாம் அமைதியான வழியில் அறவழியில் வாழ்க்கையை வாழ்கிறோம். இந்த ஶ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்து கொள்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும்பொழுது முதல் வேளையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்துவது; நம்முடைய ஆழ்வார்களில் இருந்து நாயன்மார்களில் இருந்து அவர்களுடைய சிலைகள் அங்கே வைக்கப்படும். தமிழ்ப் புலவர்களுடைய சிலைகள் வைக்கப்படும். தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். நம்முடைய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுடைய சிலையை வைப்போம். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லக் கூடிய சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே தமிழகத்தில் இருக்கிற அனைத்து கோவில்களிலும் அகற்றிக் காட்டும் என்றார்.
இதற்கு விசிக வன்னி அரசு கூறியுள்ளதாவது:-
பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையும் கடவுளை வணங்குபவன் முட்டாள் எனும் வாசகமும் அகற்றப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை சபதம் செய்துள்ளார். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். அண்ணாமலை பேசும் போது, ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் தந்தை பெரியார் வாசகம் அடங்கிய பலகை 1967 ல் வைக்கப்பட்டதாக கூறுகிறார். சிலை வைக்கப்பட்டதை தான் அப்படி சொல்லுகிறார். ஆனால், தந்தை பெரியார் சிலை 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகா வைக்கப்பட்டது? முதலில் அது குறித்து பார்க்கலாம்.
1969, ஜூன் 20 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த தின விழா கூட்டம் ஶ்ரீரங்கம் தெற்கு வாசல் கடை வீதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தான் பெரியாருக்கு சிலை வைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நகர்மன்ற கவுன்சிலர் ராஜகோபால் அய்யங்கார் நகராட்சியில் முறைப்படி தீர்மானத்தை முன் மொழிகிறார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நகர்மன்றத் தலைவர் வெங்கடேஷ்வரா தீட்சிதர் தந்தை பெரியார் சிலை வைப்பதற்காக ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் 12 க்கு 12 எனும் அளவில் 144 சதுர அடி நிலம் ஒதுக்குகிறார். 1973ல் அரசாணை போடப்பட்டு 1975 ஆம் ஆண்டு அந்த நிலத்தை நகராட்சி, திராவிடர் கழகத்திடம் ஒப்படைக்கிறது. நிலம் ஒப்படைக்கப்பட்டாலும் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 16-ல் தான் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படுகிறது. தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள் வெங்கடேஸ்வரா தீட்சிதரும் ராஜகோபால் அய்யங்காரும் தான். உண்மை இப்படி இருக்க அண்ணாமலையோ, 1967 ல் அமைக்கப்பட்டதாக சொல்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலைகளை அகற்றுவோம் என சொல்லுவது, ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழிக்குஞ்சு வந்த கதை தான். இவ்வாறு வன்னி அரசு தெரிவித்துள்ளார்.