சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீன்வாசன் எம்.எல்.ஏ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான் 2016, 2021 சட்டசபை தேர்தல்களிலும் 2019 லோக்சபா தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. இப்போதும் எப்போதும் தனித்தே போட்டி; கூட்டணியே கிடையாது என்பதில் சீமான் உறுதியாக அறிவித்து வருகிறார். 2016-ம் ஆண்டு 1.10% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி 2021 தேர்தலில் சுமார் 7% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் சுமார் 32 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 1 கோடி வாக்குகளை இலக்காக வைத்து பயணிக்கிறது.

சீமானின் 57-வது பிறந்த நாள் இன்று நாம் தமிழர் தம்பி- தங்கைகளால் எழுச்சியுடனும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் சீமானுக்கு வாழ்த்துகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
சீமானுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர், சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரு‌.சீமான் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் சீமான் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகளை தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

பாஜக மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன்: இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். சகோதரர் சீமான் அவர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்.