வரித்துறை அதிகாரிகள் மன உளைச்சலுக்கு வருமான ஆளாக்கி வருகிறார்கள்: எ.வ. வேலு

“எனது மனைவி, பிள்ளைகள் எல்லோரிடமும் என்னை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆளாக்கி வருகிறார்கள்” என்று அமைச்சர் எ.வ. வேலு கவலையுடன் தெரிவித்தார்.

தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும், கல்லூரிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எ.வ. வேலுவுக்கு சொந்தமான ஓட்டல்கள், நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும், அவருக்கு தொடர்புடையதாக கருதப்படும் காஸாகிராண்ட் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் சல்லடை போட்டு ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

5 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ரெய்டில் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியிருப்பதாக ஐடி அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ரெய்டை மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் கூறாமல் இருந்து வந்தார் எ.வ. வேலு. இந்த சூழலில், நேற்று இரவு (நவ. 7) செய்தியாளர்களை திடீரென எ.வ. சந்தித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 5 நாட்களாக எனது வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அது அவர்களின் வேலை. அவர்கள் செய்கிறார்கள். ஆனால், சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொள்வதுதான் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

எனது நேர்முக உதவியாளராக இருக்கும் சுப்பிரமணியனை விசாரணை என்கிற பெயரில், வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர். 5 நாட்களாக சென்னையில் அவரை தனி இடத்தில் வைத்து என்னுடன் தொடர்புப்படுத்தி பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். அவர் கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு அவரிடம் நிர்பந்தப்படுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல, எனது கார் ஓட்டுநரையும் தனிமைப்படுத்தி, அவரிடமும் எனக்கு எங்கெல்லாம் நிலங்கள் இருக்கிறது, சொத்துகள் இருக்கிறது எனக் கேட்டு மிரட்டி வருகிறார்கள். ஒரு அமைச்சரிடம் உதவியாளராகவும், ஓட்டுநராகவும் இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா? நான் தங்கும் விடுதியிலும் வந்து சல்லடை என்பார்களே அதேபோல சல்லடை போட்டு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். எனது மனைவி, பிள்ளைகள் எல்லாம் மன உளைச்சலில் தள்ளும் அளவுக்கு ஐடி அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு எ.வே. வேலு கூறினார்.