அமித்ஷா பிரசார வாகனத்தில் மின்கம்பி உரசியதால் விபத்து!

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த தேர்தல் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணை தொடங்கி உள்ளது.

ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. மாநில அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, தேசிய கட்சியின் தலைவர்களும் அங்கே முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பிரசார வாகனம், மின்கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. இதனால் தீப்பொறி பறந்ததுடன் மின்கம்பி அறுந்து விழுந்தது. உடனே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக அமித்ஷா மற்றும் அந்த பிரசார வாகனத்தில் இருந்தவர்கள் ஆபத்தின்றி உயிர்தப்பினார்கள். பின்னர் அமித்ஷா வேறு வாகனத்தில் சென்றார்.

பொதுவாக தலைவர்கள் பிரசார வாகனத்தில் செல்லும்போது அந்த பகுதியில் உள்ள மின்வயர்கள் வாகனங்கள் மீது உரசாமல் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்படும். அதன்பிறகே தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் பிரசாரம் செய்வார். ஆனால் அமித்ஷாவின் பிரசார வாகனத்தில் மின்வயர் உரசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உடனடியாக உள்துறை அமைச்சகத்தின், அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், நேற்று இந்த விபத்து குறித்த புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.