சட்டசபையில் ஒரு மசோதாவை 2-வது முறையாக மாநில அரசு நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது, அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் இன்று விசாரித்தது. தமிழ்நாடு அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை ஆளுநர்களின் செயல்பாடுகள் வியாதியை போல பரவி இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மொத்தம் 12 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 12 மசோதாக்களும் நிலுவையில் இருக்கின்றன. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கின்றன; ஆளுநர் ரவி தமது அதிகாரத்தை, பொறுப்பை முறைகேடாக பயன்படுத்துகிறார் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று தெரிவித்த கருத்துகள்:
ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. தமிழ்நாடு ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என தமிழ்நாடு அரசு தொட்டர்ந்துள்ள வழக்குகள் மிகவும் முக்கியமானவை. – அரசியல் சாசனம் 200-வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றிய அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில் மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். – அப்படி திருப்பி அனுப்புகிற மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்கள், கோப்புகள் மீது ஆளுநர் ஏன் முடிவெடுக்காமல் இருக்கிறார் என்பது குறித்து ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.