தந்தை பெரியாரை எதிர்த்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசினால் 2024 லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது:-
தமிழக அரசியல் வரலாற்றை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது. அண்ணாமலையின் இத்தகைய பேச்சுகள் வருகிற 2024 மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே உதவப் போகின்றன. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி ஆகியோர் குறித்து மிக மிக இழிவான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்துகிறார். இவரைப் போல இழிவாகக் கருத்து கூறியவர்கள் கடந்த காலங்களில் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட்டது திடீர் அரசியல்வாதியான அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தந்தை பெரியார் காங்கிரசை 1952 தேர்தலில் 60 அடி குழிதோண்டிப் புதைப்பேன் என்று பேசியதாக அண்ணாமலை புலம்பியிருக்கிறார். எந்த பெரியார் 1952 தேர்தல் பரப்புரையில் அத்தகைய கருத்தைக் கூறினாரோ, இரண்டு ஆண்டுகள் கழித்து 1954 ஏப்ரல் 13 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்ற செய்தி கிடைத்தவுடனே அதை ஆதரிக்கத் தொடங்கினார். இதனை அரைவேக்காடு அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.