சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் வீரபத்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளி கிருஷ்ணன் என்பவர் முழு மது போதையில் கையில் பெட்ரோல் குண்டோடு சென்று கோயில் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார். முரளி கிருஷ்ணன் கையில் பெட்ரோல் குண்டு இருப்பதை அறிந்து கோவில் உள்ளே இருந்த பூசாரி அலறி அடித்து வெளியே ஓடி வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கோயில் முன்பாக பெட்ரோல் குண்டை வீசியுள்ளார் முரளி கிருஷ்ணா. கோவிலுக்கு வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பெட்ரோல் குண்டை வீசிய முரளி கிருஷ்ணனை பிடித்து கைது செய்தனர்.
இதனிடையே இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இதன் தொடர்ச்சியாக இன்று கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகா திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.