அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே கட்சியை நிர்வகிப்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன.
இந்தநிலையில் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், “அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த வருகிற 30-ந் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில், அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் கூறியதாவது:-
தேர்தல் நெருங்கும் போது சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு. அதிமுக கட்சி வேட்டி கட்டுவதை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அது தனிப்பட்ட உரிமை.. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்தவில்லை” என்றார்.
தொடர்ந்து சட்ட ரீதியாக உங்கள் தரப்புக்கு பின்னடைவு ஏற்படுகிறதே..என செய்தியாளர்கள் வைத்திலிங்கத்திடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த வைத்திலிங்கம், ” ஹீரோ வில்லனிடம் அடிவாங்கி கொண்டே இருப்பார். கடைசியில் ஒரே அடி வில்லன் அவுட் ஆகிவிடுவான், அந்த கதை நடக்கும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, “நீதிமன்ற உத்தரவால் மக்கள் மன்றத்தில் ஓ.பி.எஸ்க்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது. அது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.