மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
மாநிலத்தின் நிதிவளத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு இயக்கூர்திகள் வரிவிதிப்பு சட்டத்தில் நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்த சட்டமசோதா கவர்னரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு, வாடகை, பயணிகள், சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் என அனைத்து வகையான வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக 8 சதவிகிதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படும் வாகனங்களுக்கு 10 சதவிகிதமும் ஒரு லட்சத்திற்கு மேல் விற்கப்படும் வாகனங்களுக்கு 12 சதவிகிதமும் வரி வசூலிக்கப்பட உள்ளது. வாடகை பயணிகள், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி 4900 ஆகவும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு வரியாக இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாயும், மற்ற வாகனங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது. இது தவிர, பசுமை வரியாக 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு 750 ரூபாயும், இதர மோட்டார் வாகனங்களுக்கு 1500 ரூபாயும், சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரியாக 500 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை வசூலிக்கப்படும் எனவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களில் தொடங்கி ஆவின் பால் பொருட்கள் வரை ஏற்பட்ட விலை உயர்வால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் பொதுமக்கள் மீது மேலும் தாங்க முடியாத அளவுக்குச் சுமையை ஏற்றும் வகையில் அனைத்து விதமான வாகனங்களுக்கான வரியை உயர்த்தி அவர்கள் படும் வேதனையை வேடிக்கை பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது திமுக அரசு.
வரி உயர்வு வாகனங்களுக்காக விதிக்கப்படுவதென்றாலும் அதன் மூலம் மறைமுகமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர வழிவகுக்கும் என்பதை உணர்ந்து இந்த வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு சுங்கவரி என நலிவடைந்திருக்கும் வாகனத் தொழிலை மேலும் நசுக்கும் வகையில் வரியை உயர்த்தியிருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் குறிப்பிட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது போல் வழங்கிவிட்டு அதனை வரி உயர்வின் மூலமாக பொதுமக்களிடமிருந்தே இருமடங்கு வசூலிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அரசு மீது பொதுமக்களே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். எனவே, மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே நாள்தோறும் பல இன்னல்களைச் சந்தித்து வரும் பொதுமக்களை துன்புறுத்தும் வாகன வரி உயர்வை ரத்து செய்வதோடு, தமிழ்நாட்டின் நிதிவளத்தைப் பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றாமல் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.